நாகையில் பல்வேறு இடங்களில் வடமாநில டி.ஐ.ஜி எனக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சிகரமான சுவாரசியமான தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸார் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நாகை புதிய கடற்கரைச் சாலையில் தனியாருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு கடந்த 24 ம் தேதி காரில் டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர் பொருட்கள் வாங்கினார். கடை கேசியரோ வாங்கிய பொருட்களுக்குப் பில்லை கொடுத்து பணம் கேட்டார். அதற்கு அந்த நபரோ பணம் தராமல் கெத்தான ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
கடை ஊழியர்களோ விடாபிடியாக வாங்கிய பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு போங்க எனப் பிடிவாதமாக மறித்து நிற்க, காரில் வந்து பணத்தை வாங்கிக்கோங்க எனக் கூறியிருக்கிறார். உடனே கேசியர் விக்னேஷ்வரனோ கார்டு இயந்திரத்துடன் அந்த நபரின் காருக்கு அருகில் சென்றார். காருக்குள் இருந்தபடி கார்டு இயந்திரத்தில் ஏடிஎம், கார்டு மூலமாகப் பணம் செலுத்திவிட்டு நான் யார் தெரியுமா மகேந்திரவர்மா, குஜராத்தில் என் பெயரைக் கேட்டால் குலைநடுங்குவாங்க. நான் குஜராத்தில் டி.ஐ.ஜியாக இருக்கிறேன், என்னிடமே பணம் கேட்குறீங்களா. நாகை எ.ஸ்.பியை நான் கூப்பிட்டால் உடனே வருவார் தெரியுமா? அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என ஏக திமிரில் மிரட்டிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களின் பேச்சு போல இல்லையே எனச் சந்தேகமடைந்த விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைத் தேடி வந்தனர். இந்நிலையில் வெளிப்பாளையம் தம்பிதுரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் காரில் வந்த அதே நபர் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கிக் கொண்டு டி.ஐ.ஜி எனக் கூறி மிரட்டிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார். இது குறித்து ரவியும் வெளிப்பாளையம் போலீஸில் புகார் செய்தார். இந்த இரண்டு புகார்களைப் பெற்ற வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என உறுதி செய்து தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்திருப்பதாக வெளிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அவரை தூக்கிவந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஜமீன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பதும், இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பெண் போலீஸிடம் ஓட்டுனராக பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பணி உயர்வு பெற்று நாகைக்கு இன்ஸ்பெக்டராக வந்துள்ளார்.
அந்த சமயம் நாகை வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றிக் கொண்டு வடமாநிலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பதாகவும், இன்ஸ்பெக்டரின் கணவர் என்றும் கூறிக் கொண்டு காரில் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதோடு காவல்துறையில் உள்ள சிலரிடம் உங்களுக்குப் பதவி உயர்வு வாங்கி தருவதாகப் பல லட்சங்களை ஆட்டைய போட்டிருக்கிறார். "இது குறித்து வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அதோடு இந்த மோசடியில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் துறை ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது என்கிறார்கள் காவல்துறையினர்.