தமிழ்நாட்டின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராகவும் அவரின் தீவிர ஆதரவாளருமான கருணா என்கிற கருணாகரன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கேண்டீனை டெண்டர் எடுத்து நடத்திவந்தார். இவர் கேன்டீன் தொடங்கிய காலத்திலிருந்தே கேண்டீனுக்கென தனி மின் இணைப்புப் பெறாமல் மருத்துவக் கல்லூரி மின்சாரத்தையே எடுத்து கேண்டீன் நடத்துவதாக சில வருடங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் ஆறுமுகம் என்பவருக்கு 15 லட்சம் ரூபாயை முன்தொகையாக பெற்றுக்கொண்டு தின வாடகை ரூ. 10,000 என்ற ரீதியில் கேண்டீன் நடத்திக்கொள்ள கருணாகரன் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி கேண்டீனை எடுத்து நடத்தத் துவங்கிய ஆறுமுகம், மேலும் உள்கட்டமைப்புகளை சரிசெய்து கேண்டீனை நடத்திவந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் மட்டுமே கேண்டீன் நடத்திய நிலையில், மீண்டும் ரூ. 10 லட்சம் அட்வான்ஸ் மற்றும் ரூபாய் 20,000 வாடகையும் வேண்டும் என்று கருணாகரன், ஆறுமுகத்தை மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகம் பலமுறை காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆட்சி மாறிய பிறகு தற்போது ஆறுமுகம் மற்றும் அவரது மகள்கள் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் மோசடி செய்து மிரட்டுவதாக புகார் அளித்துள்ளனர்.