சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். தொடர்ந்து அமைச்சரவையிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கு சென்னையில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அக்டோபர் ஒன்றாம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார். நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள், எம்.பிகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
ஆஜரான செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.