ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ளது கீழவீதி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்த 6வது நாள் அல்லது 8வது நாள் நடக்கும் மயிலார் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து இவ்விழாவினை பக்தி பரவசத்துடன் காண்பார்கள்.
இந்தாண்டு நடைபெற்ற மயிலார் திருவிழா ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இரவு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்யும் பொருட்டு முதுகில் அலகு குத்திக்கொண்டு கிரேன் ரோப் வழியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து சுவாமி சிலைக்கு பூ மாலை அணிவிப்பார்கள் பக்தர்கள். அதன்படி அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்திக்கொண்டு கீழவீதியைச் சேர்ந்த 40 வயது பூபாலன், 39 வயது முத்துக்குமார், 17 வயதேயான ஜோதிபாபு, 42 வயதான சின்னசாமி ஆகியோர் வந்தனர். கிரேன் மெதுவாக ஊர்ந்தபடி வந்துகொண்டு இருந்தது.
கிராம சாலையில் இருந்து மேடு பள்ளத்தில் கிரேன் ஏறி இறங்கும்போது பக்தர்கள் தொங்கி வந்த ரோப் வேகமாக ஆடியதில் முதுகில் குத்தியிருந்த அலகு பிய்த்துக்கொண்டு மேலிருந்து கவிழ்ந்தபடி அலறல் சத்தத்தோடு பக்தர்கள் கீழே விழுந்தனர். இதில் பூபாலன், முத்துக்குமார், ஜோதிபாபு மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவ சிகிச்சையில் இருந்த சின்னசாமியும் இறந்தார். இதனால், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இன்னும் 6 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமென கிரேன் ஆப்ரேட்டரை நெமிலி காவல்நிலைய போலீஸார் கைது செய்து, கிரேனையும் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, “காவல்துறை அனுமதி பெற்று திருவிழா நடைபெற்றது. சாலை சரியில்லாததால் இந்த விபத்து நடந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் தடுக்கப்படும்” என்றார்.