தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்குச் சென்று பணிகளைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4,000 வழங்கும் கோப்பிலும், அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதேபோல், ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும், மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நான்கு பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.