74 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சென்னை உழவர் சிலை அருகே நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். முப்படை, காவல்துறை அணிவகுப்பு மரியாதை மற்றும் மாணவி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், சென்னை தலைமைக் காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஶ்ரீ கிருஷ்ணன், தஞ்சை செல்வம் ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறந்த காவல்நிலையத்திற்கான முதலமைச்சர் விருது மூன்று காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கும், இரண்டாம் பரிசு திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கும், மூன்றாம் பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோன்று காந்தியடிகள் காவலர் பதக்கங்களைச் சென்னை நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயமோகன், சேலம், விழுப்புரம் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷா, செங்கல்பட்டு அயல்பணி நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் சிவனேசன் ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார். மேலும் கோவையில் தொடர்ந்து மதநல்லினக்கத்திறாக செய்ல்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதால் இனயத்துல்லாவிற்க்கு கோட்டை அமீர் பதக்கம் வழங்கி முதல்வர் கவுரவித்தார்.