Skip to main content

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வழக்கில் களங்கம் கற்பிக்கப்படுகிறது!- அவதூறு பரப்புவது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம்!   

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

FORMER UNION MINISTER DMK MP JAGATHRAKSHAKAN CHENNAI HIGH COURT

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995- ஆம் ஆண்டு, குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக, குவிண்ட்டன் டாவ்சன் என்பவரின் புகார் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஸ்குமார் விசாரித்து வருகிறார். இதே விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை,நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

 

சி.பி.சி.ஐ.டி. வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு,  நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் மகள் ஸ்ரீநிஷா ஆகியோர், செப்டம்பர் 30- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானதாகவும், காவல்துறை கோரியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ஆவணங்களைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும் 2 வார அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கிற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியுள்ளதால் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

FORMER UNION MINISTER DMK MP JAGATHRAKSHAKAN CHENNAI HIGH COURT

அதற்கு அவகாசம் வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் வழக்கை நவம்பர் 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை ஜெகத்ரட்சகனை தொந்தரவு செய்யக்கூடாது என்ற உத்தரவையும் நீட்டித்தார்.

 

அப்போது நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. அது, ஏற்புடையதல்ல.அதுகுறித்து, கருத்தில் கொள்ளப் போவதில்லை. மேலும், சமீபகாலங்களில் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என கவலை தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்