முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம் உடல் நலக்குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (12/10/2022) காலை உயிரிழந்தார்.
அவரது உடல் கோவை மாவட்டம், சாய்பாபா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கோவை தங்கத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை தங்கம் குறித்த விரிவான தகவல்!
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகரான கோவை தங்கம், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
பின்னர், ஜி.கே.வாசன் எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய போது, அவருக்கு ஆதரவு தெரிவித்த கோவை தங்கம், ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
அதன் பிறகு, கடந்த 2021- ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் கோவை தங்கம்.