தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரதான சுற்றுலாத் தளமாக விளங்கக்கூடியது 'சுருளி அருவி'. கம்பம் கிழக்கு வனச்சரக கட்டுப்பாட்டில் இந்த அருவி உள்ளது.
சுருளி அருவிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சமையல் கூடம், உணவு அருந்தும் கூடத்தினை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கம்பத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ரமேஷ் என்பவர், ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி கொடுத்துள்ளார். தன்னார்வலரால், கட்டி கொடுக்கப்பட்ட அந்தக் கட்டிடங்களை அரசு சார்பில் கட்டப்பட்டதாகக் கூறி, அரசு கணக்கில் வனத்துறையினர் பணத்தை எடுத்துக் கொண்டதாக, கம்பம் கிழக்கு வனத்துறையினர் மீது புகார் எழுந்தது.
அதன் பேரில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில், வனவர் திலகர், நிதி முறைகேடு செய்து பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில், மாவட்ட வனத்துறை நிர்வாகம், வனவர் திலகரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்பதால், வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தற்காலிகப் பணியிடை நீக்கம்.