ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர் அருகே பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் பகுதி. அப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் அருகில் இருந்த கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி ஏழு மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊரையொட்டி உள்ளது. வழக்கம் போல் மாடுகளை மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது தனது பசு மாட்டின் கன்று உடல் முழுவதும் காயம் ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி பசு கன்று இறந்தது உறுதி செய்தனர். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கல்குவாரி அருகே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.