வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், த.செ.கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், கு.ராமகிருட்டிணன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், ப. அப்துல் சமது, பெரியார் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சர்வதேச அளவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ளது போன்று பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. இதன் காரணமாக ஆங்காங்கே வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தவித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை மீண்டும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் மோசமாகக்கூடிய சூழல் உருவாகும் என்பதால், அவர்களை உடனடியாகத் தமிழகம் அழைத்துவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு அதற்கான முன்னெடுப்புகளை துவக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி வெளிநாடு வாழ் மலையாளிகளுக்கு ஹெல்ப்லைன், டெலிமெடிசின் சேவைகளை கேரளா அரசு அமைக்க முன்வந்துள்ளது. அதன் முதல்கட்ட நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் வசிக்கும் தம் மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய உதவி மையங்களை கேரள அரசு அமைத்துள்ளது.
தனது மாநிலம் சார்ந்த மக்களை மீட்கவும், நோய்த் தொற்றிலிருந்து அவர்களைக் காக்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசைப் போன்று தமிழக அரசும் பல்வேறு வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும். மேலும், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையில் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களும் தமிழகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
அவர்களையும் தமிழகம் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலம் சார்ந்த மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அதிக முனைப்புக் காட்டும் நேரத்தில், பிற மாநிலத்தவர்கள் மீதான அவர்களின் அணுகுமுறை திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருவதால், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்களையும் தமிழகம் அழைத்து வந்து அவர்களைத் தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்திடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.