ஓமலூர் அருகே, கலப்பட வெல்லம் மற்றும் வெல்லத்தில் கலப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சர்க்கரையை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவி ஆகியோர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்தனர். எல்லப்புளி கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான கரும்பாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து 5-0 கிலோ எடை கொண்ட 63 வெள்ளை சர்க்கரை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 1.26 லட்சம் ரூபாய் ஆகும். வெல்லத்தில், வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்வதற்காக வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதே ஆலையில் இருந்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1080 கிலோ கலப்பட வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, நெல்லையில் உள்ள உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆலை உரிமையாளர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தியதில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வெள்ளை சர்க்கரையை வாங்கி இருப்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், இந்த சர்க்கரையை, காமலாபுரத்தில் உள்ள சன் டிரேடர்ஸ் நிறுவனத்தில் இருந்து மொத்த விலையில் கொள்முதல் செய்ததாகவும் கூறினார்.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சன் டிரேடர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அந்த நிறுவனத்தின் கிடங்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 மூட்டை வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். இந்நிறுவனத்தின் அருகில் செயல்பட்டு வந்த சாய் சக்தி என்ற நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கிருந்து 250 மூட்டை வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும்.
இவ்விரண்டு நிறுவனங்களிலும் வெள்ளை சர்க்கரை எவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது?, யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது உன்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ''வெல்லம் தயாரிப்பின்போது வெள்ளை சர்க்கரை கலப்பது தெரிய வந்தாலோ, விதிமீறல் நடந்திருந்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை மற்றும் உணவுப்பகுப்பாய்வுக் கூட முடிவுகளின் அடிப்படையில் இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்த சோதனையின் மூலம், 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1080 கிலோ கலப்பட வெல்லம், 22.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1113 மூட்டை சர்க்கரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக வெல்ல ஆலை உரிமையாளர் எல்லப்புளி செந்தில்குமார் (38), சன் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் அம்பிகா (41), சாய் சக்தி டிரேடர்ஸ் உரிமையாளர் முத்துக்குமார் (33) ஆகியோரிடம் விளக்கம் கேட்டு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.