கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் கோரி மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில், பள்ளியின் தாளாளர், தாளாளரின் மனைவி மற்றும் மூன்று ஆசிரியர்கள் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று (27/07/2022) நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் ஆகிய ஐந்து பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டு, அவர்களை மீண்டும் இன்று (28/07/2022) மதியம் 12.00 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று மதியம் விசாரணை தொடங்கிய நிலையில், விசாரணை முடிந்து அவர்களை நேற்றிரவு மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியின் தாளாளர், தாளாளரின் மனைவி மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.