“மூன்று ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட எங்களை இன்னும் ஊரோடு சேர்த்துக்கல, உறவுகளோடு அன்னம் தண்ணி புழங்க முடியல” என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் குடியேறி சமைத்துச் சாப்பிட முயன்ற மீனவர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்தவர் மீனவர் லெட்சுமணன். வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன் பிடிக்கக்கூடாது என கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்திருந்தனர். ஆனால் லெட்சுமணன் குடும்பத்தினர் பிழைப்பிற்காக ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்ததாக, ஊர் கட்டுப்பாட்டை மீறியதாகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் ஊரில் உள்ள யாரும் இவர்கள் குடும்பத்துடன் ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளக்கூடாது, அப்படி மீறி பேசுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்துவிட்டனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து லெட்சுமணனும், அவரது குடும்பத்தினரும் ஆரம்பத்தில் நாகை ஆட்சியர், தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என அதிகாரமுள்ள அனைவரிடமும் புகார் அளித்து நீதி கேட்டனர்.
“அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எங்களின் நிலைமை அறிந்து இரக்கம் காட்டவில்லை, மூன்று ஆண்டுகளைக் கடந்தும் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எவ்வித நியாயமும் கிடைக்கல, நடவடிக்கை எடுக்காததால் வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருகிறோம். உறவுகள் இருந்தும் ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் ஆதரவற்ற அனாதைகளாகத் தவிக்கிறோம். உறவுகளோடு அன்னம் தண்ணி புழங்க முடியல, நல்லது கெட்டதுல கலந்துக்க முடியல, இருப்பதை விட செத்துடலாம்னு தோனுது” என்று கலங்குகின்றனர் லெட்சுமணனின் மகனும், அவரது மனைவியும்.
கடந்த வாரம் நடந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லெட்சுமணனும் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எட்டு பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரண்டு நாளில் பிரச்சனையை பேசித் தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தனர். ஒரு வாரம் கழிந்த நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தான் மீனவர் லெட்சுமணனின் மகன் வினோத்தும் அவரது மனைவி குணவதியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி கம்பத்தின் கீழே ஸ்டவ் அடுப்பு வைத்து சமையல் செய்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் உடன்படாததால் அவர்களது அடுப்பை அணைத்து வலுக்கட்டாயமாக இருவரையும் வெளியேற்றினர்.