Skip to main content

சுருக்கு மடி வலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை கோரி மீனவர்கள் முற்றுகை!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

Fishermen blockade demanding action on shrink net users!

 

 

நாடு முழுவதும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

அதனால் சிறிய வகை படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாற்றுகின்றனர்.

 

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நோனங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, பெரியகுப்பம், சாமியார்பேட்டை  உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 

 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், மீனவர்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களில் 5 பேர் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம் சமரசம் செய்த காவல் துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் 10 பேர் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரியை சந்தித்து சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  சுருக்கு மடி வலைகள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் கூறி கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்