கிள்ளை அருகே குழந்தைகள் முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்வதை வரவேற்று குழந்தைகளுக்கு மாலை அனிவித்த சிதம்பரம் சார் ஆட்சியர்.
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே திருவள்ளுவர் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கல்வியறிவு பற்றி தெரியாதவர்கள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் நாடோடிகளாக இந்த நாட்டில் வாழ்வதற்கான எந்த ஒரு அரசு அடையாள அட்டைகளும் இல்லாமலும், ஒரு மனிதனுக்கு தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி துன்பத்திலும் துயரத்திலும் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வந்தனர்.
இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் பூராசாமி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கென்று புதிய சி.மானம்பாடி கிராமத்தில் அரசு மூலம் வீட்டுமனை பட்டா பெற்று அவர்கள் வசிக்க ஏற்பாடு செய்தார். அந்த இடத்திற்கு திருவள்ளுவர் குடியிருப்பு என பெயர் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மூலம் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.
இவர்களின் குழந்தைகள் முதல் தலைமுறையாக கல்வி கற்க அரசு பள்ளிக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பூராசாமி தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன கலந்துகொண்டு முதல் தலை முறையாக அரசு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து, கற்றல் உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை அப்பகுதியில் நட்டு வைத்தார். பின்னர் அந்தப் பகுதி மக்களிடம் அவர் பேசுகையில் நான் இருக்கும் வரை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன் எனவே இங்குள்ள மக்கள் அனைவரும் கல்வி பயின்று நல்ல முறையில் முன்னேற வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள கிராம மக்களை ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.