Skip to main content

பட்டாசு விபத்து: துண்டு துண்டாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல்!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Fireworks accident: Boy's body recovered in pieces

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பரபரப்பான மக்கள் நடமாட்டம் உள்ள மூன்றுமுனை சந்திப்பு பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் (27.10.2021) திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அக்கம்பக்க கடைகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பீரங்கி குண்டு தாக்கியதுபோல் உருக்குலைந்து போனது. அதில் அப்பகுதியில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவந்த பொதுமக்கள், டீ குடிக்க வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 

இதில் தீக்காயம்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் சிதறிய கட்டட சுவரின் பாகங்கள் பலர் மீது மோதி முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் சகோதரர் மகன் தனபால் என்ற 11 வயது சிறுவன் உடல் மட்டும் கிடைக்கவில்லை. நேற்று இடிபாடுகளை இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினார்கள். அப்போது இடிபாடுகளுக்கிடையே சிறுவனின் உடல் துண்டுத் துண்டாக மீட்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு சிறுவனின் உறவினர்கள் கதறி அழுதனர்.

 

இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் தம்பி முருகன், தனபாலை தனது தாயார் வள்ளியிடம் விட்டுவிட்டு அவர் மனைவி சித்ரா உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

 

Fireworks accident: Boy's body recovered in pieces

 

ஆனால் அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்ப வருவதற்குள் பட்டாசு கடையில் நடந்த பெரும் தீ விபத்தில் வள்ளியும் அவரது பெயரன் தனபால் ஆகிய இருவரும் விபத்தில் இறந்தனர். பெயரனும், பாட்டியும் பலியான சம்பவம் மக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து நடந்த இடத்தை தடய அறிவியல் இணை இயக்குநர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் கிடைத்த தடயங்களையும் சேகரித்துள்ளார்.

 

பின்னர், இந்த விபத்து குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “பொதுவாக அனுமதி பெற்று விற்பனை செய்யக்கூடிய பட்டாசுகளும் உள்ளன. அனுமதியின்றி மறைமுகமாக பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடிய முறைகளும் உள்ளன. எனவே கிடைத்த தடய மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் இயக்குநரத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கிடைத்த பிறகே இதனுடைய உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்” என்கிறார் தடய அறிவியல் இணை இயக்குநர் சண்முகம். 

 

 

சார்ந்த செய்திகள்