பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது விஷவாயுவால் மயங்கிய இளைஞர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) தனது சகோதரர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சுமார் 60 அடி ஆழத்தில் பாறை கிணறு தோண்டியுள்ளார். ஆனால் கிணற்றிலிருந்து தண்ணீர் ஊற்றி எடுக்காததால் அதே கிணற்றில் பக்கவாட்டுப் பகுதியில் 200 அடி ஆழத்திற்கு துளையிட்டு பக்கவாட்டில் போர் போட்டுள்ளார். நேற்று மதியம் வெடி வைத்து தண்ணீர் ஊற்று எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) மற்றும் பாஸ்கர் (26) ஆகிய இருவரும் அந்தக் கிணற்றில் நீர் பெருக்கெடுத்துள்ளதா என்பதைப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது கிணற்றின் மேலிருந்து கயிற்றைக் கட்டி முதலில் ராதாகிருஷ்ணன் உள்ளே இறங்கியுள்ளார். கிணற்றின் உள்ளே பாறை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட வெடியிலிருந்து வெளியான விஷவாயு உள்ளே இருந்துள்ளது. இதனால் ராதாகிருஷ்ணன் மயங்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் கிணற்றில் இறங்கி வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து மேலே இருந்த பாஸ்கர் கிணற்றின் உள்ளே இறங்கியுள்ளார் இவர்கள் இருவரும் வெகு நேரமாக வெளியே வராதால் இவர்கள் கிணற்றின் அருகே இருந்ததைப் பார்த்த அக்கம்பக்க பொது மக்கள் கிணற்று மேலே இருந்து சத்தம் கொடுத்தனர். கிணற்றின் உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வராததால் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், பால்ராஜ், தனபால் ஆகிய 3 பேரும் கயிற்றின் மூலம் கிணற்றில் உள்ளே இறங்கி பாஸ்கரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பாஸ்கரை அருகிலிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
மீண்டும் கிணற்றில் இறங்கி ராதாகிருஷ்ணனை தீயணைப்பு வீரர்கள் தேடி கொண்டிருந்தபோது தீயணைப்பு வீரர் ராஜ்குமார் விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார்.
பின்னர் மாற்று வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடன் கிணற்றில் இறக்கப்பட்டு ராதாகிருஷ்ணனை சடலமாகவும் ராஜ்குமாரை மயக்க நிலையிலும் மேலே கொண்டு வந்தனர். ராதகிருஷ்ணன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரையும் அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீயணைப்பு வீரர் ராஜ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த திருச்சி தீயணைப்புத் துறை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்
அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து, அதில் இருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.