கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. பழுப்பு நிலக்கரி மூலம் இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி என தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை இரண்டாவது அனல்மின் நிலையத்தின் அலகு 6-ல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் கரும் புகை சூழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்க கிராமத்தினர் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இத் தீவிபத்தில் பாய்லர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 13 பேர் தீக்காயங்களுடன் கதறியபடியே வெளியே ஓடி வந்தனர். உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஓடிவந்த தொழிலாளர்களை மீட்டு நெய்வேலி என் .எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆட்குறைப்பு செய்யப்பட்டு 50 % தொழிலாளர்களே சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும், என்.எல்.சி நிறுவனத்தில் போதிய பராமரிப்பு இல்லாததாலும் தொடர்ச்சியாக பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக விபத்துக்கள் நிகழ்ந்து வருவதாகவும், இதனால் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைவதுடன், விலை மதிக்க முடியாத தொழிலாளர்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நேர்வதாகவும் கவலைப்படும் தொழிற்சங்கத்தினர் ‘உடனடியாக அனைத்து இயந்திரங்களையும் பழுது நீக்கம் செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் காரணங்களை கண்டறிவதற்குள் அடுத்த ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது தொழிலாலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.