தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்த அளவிற்கு மாநிலத்தின் உரிமை மற்றும் நிதிக்கு போராட எனக்கு கடமையாற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கெல்லாம் நான் நன்றி கூற வேண்டியது மதுரை மத்திய தொகுதி வாக்காளர்களுக்கு. அங்கே வெற்றி பெறவில்லை என்றால் இந்த பணிகளை எல்லாம் செய்திருக்க முடியாது. இன்றைக்கு இருக்கிற இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் எனக்கு அளித்திருக்கிற முதல் கடமை மதுரை மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது. அதை 10 நாட்களாக செய்துவிட்டுதான் சென்னைக்கு திரும்பினேன். ஃபைல்களை எல்லாம் பார்ப்பதற்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்காகவும் இங்கு இருக்கிறேனே தவிர தொடர்ந்து தினமும் மானிட்டரிங் ஆபீசர், கலெக்டர் உடன் தொடர்பில் இருந்து கொடுத்த உறுதியின் அடிப்படையில் ஆக்சிஜன், கூடுதல் படுக்கை, மருந்து போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படி சென்னை, திருவள்ளூர் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததோ அதேபோல் மதுரையிலும் கரோனா கட்டுப்பாட்டுக்கு வரும்.
மாநில அரசுகளிடம் வரிப்பணத்தை பெற்று அதையே மத்திய அரசு திரும்ப தருகிறது. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிக அளவில் வரிப்பணத்தை விட்டு தருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து பிற மாநில அமைச்சர்கள் எனக்கு அறிவுறுத்தல்கள் அளித்துள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பது குறித்து பேசினேன். அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை. ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்திற்கு 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கட்டமைப்பையே சரியில்லை எனக் கூறுகிறோம். இதில் பெட்ரோலை ஜிஎஸ்டிக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. கரோனா சிகிச்சை பொருள்களுக்கு சில மாதங்களாவது வரிவிலக்கு தர கூறினேன். மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதற்காக கூடுதலாக கடன் வழங்கப்பட வேண்டும்'' என்றார்.