பண மோசடி வழக்கில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 24- ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம், சினிமா பாரடைஸ் என்ற பெயரில் திரைப்பட வினியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010- ஆம் ஆண்டு, நடிகர் விஜய் நடித்து வெளியான 'காவலன்' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்காக, சென்னை அடையாரைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் 23 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
‘ஒரு லட்ச ரூபாய் வட்டி சேர்த்து 24 லட்ச ரூபாயாக, மூன்று மாதங்களில் திருப்பித் தந்து விடுவதாக உறுதி அளித்தும், பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, எனக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்தார்’ என விருகம்பாக்கம் போலீசில் சுந்தர் புகார் அளித்திருந்தார். பின் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்தப் புகாரின் அடிப்படையில், சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தன்னைக் காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி சக்தி சிதம்பரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாக சக்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சுந்தர் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.