
தர்மபுரியில் பெண் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தர்மபுரி, பிடமனேரி அருகே உள்ள மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி தேவி கருமாரியம்மாள் (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தேவி கருமாரியம்மாள், தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்தார்.
அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வலியால் அவதிப்பட்டுவந்தார். பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் கடும் விரக்தியடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 24) மாலை, அவருடைய மகனைக் கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிவரும்படி வெளியே அனுப்பிவைத்துள்ளார். மகனும் கடைக்குச் சென்றுவிட்டார். அதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தர்மபுரி நகரக் காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். பெண் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.