Skip to main content

கல்லூரியில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம்; விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Fees additional to those prescribed by the College; High Court order to investigate

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் அரசு உதவி இல்லாத பாடப்பிரிவுகள் என இரண்டு முறையான பாடப்பிரிவுகள் காலை மற்றும் மாலையில் நடந்து வருகின்றன. இதில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடம் பெற வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

 

இந்த கல்விக் கட்டணமானது அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஆனால் அரசு உதவி பெறும் பெரும்பாலான கல்லூரிகள் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு தங்களின் வசதிக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை தாங்களே அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் நிர்ணயித்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. 12வது வகுப்பை முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காதபோது, தங்களின் பொருளாதார சூழ்நிலையை மீறி அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேருகின்றனர். 

 

சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பிரபல கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாகப் பெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இளங்கலை பட்டப் படிப்பிற்கு வருடத்திற்கு 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக அரசின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியோ வருடத்திற்கு ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் வரை கல்வி கட்டணமாகப் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

தற்போது அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர். அந்த மனுவில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக சென்னை வேளச்சேரியில் உள்ள அந்தக் கல்லூரி வசூலித்ததாகவும், அதனைத் திரும்ப அளிக்குமாறும் தெரிவித்துள்ளனர். அந்த மனுவை விசாரித்து 20.06.2023 அன்று நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கல்லூரி மண்டல இயக்குநர், சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்