தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராசேந்திரன் - இந்திரா தம்பதியின் மகன் கதிர்வேல் (32). பொறியியல் பட்டதாரி. திராவிடர் கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்ட கதிர்வேல், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணியில் சிறப்பாக செயல்பட்டு, ஏராளமான இளைஞர்களை திராவிடர் கழகத்தில் இணைத்தவர். ஐடி நிறுவன வேலை காரணமாக சென்னை சென்றார். அங்கேயும் கழகப் பணியில் தீவிரம் காட்டிய கதிர்வேல், தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டு வந்தார்.
கடந்த 2018 பிப்ரவரி 7ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் ரம்யாவை மணந்தார். இவர்களுக்கு 2 வயதில் அன்புச்செல்வன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கதிர்வேல் குடும்பத்தோடு சொந்த ஊரான சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து வேலை செய்துவந்தார்.
இன்று (19.05.2021) காலை தனது வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடக்க, சிறுவன் அன்புச்செல்வன் விளையாட அந்த மின்கம்பியை தொட்டபோது, அதைப் பார்த்த தந்தை கதிர்வேல் வேகமாக ஓடி மகனைத் தூக்கியபோது மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை அன்புச்செல்வனுக்கு மின்சாரம் தாக்கி தீ காயம் ஏற்பட்ட நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அறுந்து கிடந்த மின்கம்பிகளில் இருந்து மகனைக் காப்பாற்றிய தந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், கிராமத்தினர் கூடி கதறி அழுதனர்.
50 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்பாதையில் இருந்து அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுகிறது. மாற்றுங்கள் என்று பலமுறை மின்வாரியத்தில் முறையிட்டும் பலனில்லை. அவர்களின் அலட்சியத்தால் ஒரு துடிப்பான இளைஞரை இழந்துவிட்டோம் என்கிறார்கள் உறவினர்களும் கிராமத்தினரும்.
சம்பவ இடத்திற்கு வந்து ஆறுதல் சொன்ன பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், உடனடியாக பழைய மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “போன வாரம் கூட மின்கம்பி அறுந்துள்ளது. இந்தப் பழைய கம்பிகளை மாற்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மின்சாரம் தாக்கி இறந்த கதிர்வேல் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், சிகிச்சை பெற்றுவரும் குழந்தை அன்புச்செல்வனுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதனால் சித்தாதிக்காட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.