Skip to main content

சொத்து தகராறு; தந்தையை இரும்புக் குழாயால் அடித்துக்கொன்ற மகன்!

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Father passes away police arrested son in salem

 

கெங்கவல்லி அருகே, சொத்து தகராற்றில் வயதான தந்தை என்றும் பாராமல் இரும்புக் குழாயால் அடித்துக்கொன்ற மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (82). விவசாயி. இவருடைய முதல் மனைவி ஐயம்மாள். இவர், நாற்பது ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பெருமாள் (61) என்ற ஒரு மகன் உள்ளார். முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு, அலமேலு என்பவரை முத்துசாமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அலமேலு மூலமாக செல்வராஜ் என்ற மகன் பிறந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். இதையடுத்து முத்துசாமி தனியாக வசித்து வந்தார். 

 

மூத்த தாரத்தின் மகன் பெருமாளுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முத்துசாமி தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பெருமாளுக்கு ஒரு ஏக்கரும், சமீபத்தில் இறந்து போன செல்வராஜூக்கு 83 சென்ட் நிலத்தையும் ஏற்கனவே பிரித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியுள்ள மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை தன் பெயரில் வைத்துக் கொண்டார். இந்த நிலம் தலைவாசல் செல்லும் சாலையில் உள்ளது. 

 

கடந்த 25 நாட்களுக்கு முன்பு முத்துசாமி, தன் பெயரில் உள்ள நிலத்தில் 1.17 ஏக்கர் பரப்பளவை மட்டும் பிரித்து, ஒருவருக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவரிடம் முன்பணமும் பெற்றுக்கொண்டார். இதையறிந்த பெருமாள், நிலம் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தனக்கும் பங்கு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசாமி, ''வயதான காலத்தில் எனக்கு யாரும் உதவி செய்வதில்லை. எதற்காக உனக்கு பணம் தர வேண்டும்? உனக்கு உரிய பங்கை ஏற்கனவே பிரித்துக் கொடுத்து விட்டேன். அதனால் இந்தப் பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட தர முடியாது,'' எனக்கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஆக. 6 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் முத்துசாமி தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த பெருமாள், நிலத்தின் விற்பனைப் பணத்தில் பங்கு கேட்டு மீண்டும் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பெருமாள், வீட்டு சமையல் அறையில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து வந்து வயதான தந்தை என்றும் பாராமல், அவருடைய தலையில் சரமாரியாகத் தாக்கினார். 

 

இதில் பலத்த காயம் அடைந்த முத்துசாமி, நிகழ்விடத்திலேயே பலியானார். இதையடுத்து பெருமாள் தந்தையைக் கொல்லப் பயன்படுத்திய ஊதுகுழலுடன் வீரகனூர் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தந்தையைக் கொன்றதாக பெருமாளைக் காவல்துறையினர் கைது செய்தனர். சொத்து தகராற்றில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்