விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகில் உள்ள சேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம்(58). இவரது மகள் தேன் குழலி(25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், இரவு 9 மணி அளவில் திருக்கனூர் கடைவீதியில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை நீலமேகம் ஒட்டிக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், கொடுக்கூர் ஏரிக்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கருங்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் தூக்கி எறியப்பட்ட தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற லாரியை உடனடியாகக் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி இரவு 11 மணி அளவில் மறியலைக் கைவிட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 8 மணி வரை விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் கண்டுபிடிக்காததால் கோபமுற்ற கிராம மக்கள், இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி மற்றும் அப்பகுதி ஒன்றிய சேர்மன் வாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள், ‘லாரியை பறிமுதல் செய்ய வேண்டும். டிரைவரையும் கைது செய்து ஜாமீனில் வரமுடியாத அளவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் திருவக்கரை சாலை பகுதிகளில் டிப்பர் லாரியால் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர். அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
அதேசமயம், விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியையும், அதன் டிரைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று நீலகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்வதை மருத்துவர்கள் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.