தமிழகத்தில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையில் வடசேரி, மகாதேவபட்டினம், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிச்சிக்கோட்டை, பரமன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூரிலும் நிலக்கரி எடுக்க திட்டம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய பகுதிகளில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஒரத்தநாடு வட்டத்தில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று மாலை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய நிலக்கரி சுரங்கம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள விளக்கத்தில், 'ஆரம்பக்கட்ட ஆய்வுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஒரு ஆரம்பக்கட்ட ஆய்வு. நாடு முழுவதும் இதுபோன்று எங்கெங்கெல்லாம் கனிமங்கள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சுரங்க நிறுவனம் ஆய்வு மேற்கொள்வார்கள். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மண்டலமாக டெல்டா மண்டலம் அறிவிக்கப்பட்டது. அதன் சட்டம் அமலில் இருக்கிறது. தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரிய வந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள். மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.