தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆட்கொண்டார்குளம் எனும் கிராமம். இங்குள்ள விவசாயி சுப்பையாவின் மகன் தங்கராஜ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் சங்கரன்கோவிலில் குடியிருப்பவருமான மருதையா என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. பலமுறை பலர் பஞ்சாயத்து பேசியும் நிலப்பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பகைமை இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கராஜைத் தேடி மருதையா ஆட்கொண்டார்குளம் சென்றிருக்கிறார். தங்கராஜ் அவரது விவசாய நிலத்தில் இருப்பது தெரியவர அங்கே மருதையா சென்றிருக்கிறார். அந்த சமயம் இருவருக்குமிடையே மீண்டும் நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமான மருதையா திடீரென, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கராஜின் நெற்றி பக்கம் வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த தங்கராஜ் அலறிக்கொண்டு கீழே விழ, மருதையா அங்கிருந்து தப்பியிருக்கிறார். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தங்கராஜின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னக்கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் பட்டாணி மேற்படி எதிரியான மருதையாவை கைது செய்தார். "ஐ.பி.சி.307வது பிரிவின் கீழ் மருதையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் நிலம் தொடர்பான பிரச்சனை இருந்துவந்ததாகத் தெரிகிறது. எனவே சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார் இன்ஸ்பெக்டர் பட்டாணி.