தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனையில் தாய், மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி பழனியம்மாள் (73). இவருடைய மகன் ராஜமாணிக்கம் (55) விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் பெரியசாமி (63) விவசாயி.
ராஜமாணிக்கத்திற்கும், பெரியசாமியின் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக வழித்தட பிரச்சனை இருந்து வந்துள்ளது. ராஜமாணிக்கமும் அவருடைய தாயார் பழனியம்மாளும், ஜனவரி 3 ஆம் தேதி தங்கள் வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அதேவேளையில், பக்கத்து நிலத்தில் பெரியசாமி கீரை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வழித்தட பிரச்சனை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த பெரியசாமி, அரிவாளால் பழனியம்மாளை வெட்டினார். அதைத் தடுக்க வந்த ராஜமாணிக்கத்திற்கும் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த உறவினர்கள் அங்கே ஓடிவந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல்நிலைய காவல்துறையினர், தலைமறைவான பெரியசாமியைத் தேடி வந்தனர். உள்ளூரில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை புதன்கிழமை (ஜன. 4) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.