Skip to main content

கடன் குறித்து கேட்ட குடும்பத்தினர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Family struggle by debtor

 

திண்டிவனம் அருகில் உள்ள தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ராஜ்குமார்(50). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன் என்பவரும் நண்பர்கள். இருவரும் செஞ்சி அருகில் உள்ள நாட்டார்மங்கலத்தில் பர்னிச்சர் கடை வைப்பது என்று முடிவு செய்து அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு பர்னிச்சர் கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்து வந்தனர். 

 

இந்நிலையில், நண்பர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதையடுத்து இருதரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் முடிவில் ராஜ்குமார் கடை உரிமையை மதியழகனிடம் ஒப்படைத்துள்ளார். கடை வைப்பதற்காக வாங்கப்பட்ட கடன் தொகையை மதியழகன் ஏற்றுக்கொள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது. 

 

ஆனால் மதியழகன், கடனை திருப்பி கட்டவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் ராஜ்குமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 5ம் தேதி ராஜ்குமார் அவரது மனைவி ஆகிய இருவரும், நாட்டார்மங்கலம் வந்து மதியழகனிடம் கடன் தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதியழகன், தன் கடையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ராஜ்குமார் மீது ஊற்றியுள்ளார். அதை தடுக்க வந்த அவரின் மனைவி மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் அங்கிருந்து தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு மனைவியயும் காப்பாற்றியுள்ளார். இருந்தும் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜகுமாரின் மனைவி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியழகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மதியழகனை தீவிரமாக தேடி வருகிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்