Skip to main content

அரசுப் பேருந்தில் போலி டிக்கெட்; கையும் கட்டுமாகச் சிக்கிய நடத்துநர்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Fake ticket in government bus; Conductor

 

அரசு குளிர்சாதனப் பேருந்தில் நடத்துநர் ஒருவர் போலி டிக்கெட்களை பயணிகளுக்கு கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

 

சேலத்திலிருந்து கடலூருக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், குளிர்சாதனப் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்திலிருந்து கடலூர் சென்ற குளிர்சாதனப் பேருந்து ஒன்று நகரப் பேருந்தைப் போலப் பல இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தொடர்ந்து பயணித்த பேருந்து, வடலூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறினர்.

 

பயணிகளிடம் கொடுக்கப்பட்டிருந்த டிக்கெட்களை அவர்கள் பரிசோதனை செய்தபோது, அவை போலி டிக்கெட்கள் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்துநரிடம் நடத்திய விசாரணையில், போலி டிக்கெட்களை பண்டல் பண்டலாக பேண்ட் பாக்கெட்டில் இருந்து நடத்துநர் எடுத்தார். போலி டிக்கெட்களை பயணிகளிடம் கொடுத்து பணம் பறித்ததை உறுதி செய்த அதிகாரிகள் பேருந்தை நிறுத்தினர். உடனடியாக பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த போலி டிக்கெட் மோசடி குறித்து சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு தகவல் அளித்தனர். திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அந்த பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துநர் நேருவையும் துறை ரீதியாக விசாரிக்க சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நடத்துநர் நேருவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்