விழுப்புரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா, செஞ்சி எஸ்ஐ செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான டீம் ஆரணி செஞ்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு கார் சீறிப் பறந்து வந்தது. இந்த காருக்கு பாதுகாப்பாக மூன்று டூவீலர்களில் 6 பேர் கூடவே வந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் 27 பெட்டிகளில் 1392 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். காரில் வந்தவர்களையும் டூவீலரில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் வளத்தி அருகில் உள்ள முருகன் தாங்கல் கிராமத்தில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் போலி மதுபானம் தயாரித்து அதை வெளியாட்களுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர்கள் போலி மது தயாரித்த கட்டிடத்தின் முன் பகுதியில் பழைய டயர்கள் புதுப்பிக்கும் கம்பெனி என்ற போர்டை வைத்துவிட்டு உள்ளே போலி மது தயாரித்து வெளியூர்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதுபான தயாரிப்பில் ஈடுபட்டதாக சென்னை கொடுங்கையூர் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாலு, காரைக்காலைச் சேர்ந்த பாண்டியன் , ரஞ்சித், சாகுல் அமீது, கடலூரைச் சேர்ந்த ஆனந்தராஜ், வளத்தியைச் சேர்ந்த அஜித்குமார், மதன், வேளாங்கண்ணி உட்பட பத்து பேர்களை போலீசார் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய 3 டூவீலர்கள், ஒரு கார் உட்பட 25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர். இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து மிக குறைந்த விலையில் உள்ள சரக்குகளை வாங்கி வந்து, அதில் கலப்படம் செய்து தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்கும் மது பாட்டிலில் உள்ள லேபிள்களை போன்று டூப்ளிகேட் தயாரித்து அதை போலி மதுபான பாட்டில்களில் ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுபோன்ற கும்பல் அவ்வப்போது காவல் துறையால் கைது செய்யப்படுவதும், சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இதே போன்று போலி மதுபானம் தயாரித்து விற்பது என்பது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே பெரம்பலூரில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது அடுத்து மரக்காணம் அருகே மயிலம் அருகே இப்படி பல இடங்களில் மாறிமாறி போலி மதுபானம் தயாரித்து விற்பதும், அதை போலீஸ் பிடிப்பதும் திருடன் போலீஸ் விளையாட்டு போல தொடர்ந்து நடைபெற்று வருகிறது.