சேலத்தில், தங்க நகைகளை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக போலி தங்க பிஸ்கட்டை கொடுத்துவிட்டு, நகைக்கடை அதிபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், செவ்வாய்பேட்டை மாதவராயன் தெருவில் தங்க நகைக்கடை நடத்தி வருபவர் லால்டூ. இவருடைய கடைக்கு டிச. 20ம் தேதி, கேரளா மாநிலம் திருச்சூர் ஒல்லூர் சிராச்சி பகுதியைச் சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் (39), திருச்சூர் எழுக்கம்பனியைச் சேர்ந்த விஷ்ணு (30), நெல்சன் (29) ஆகியோர் வந்தனர். அப்போது லால்டூவிடம் அவர்கள், ஒரு கிலோ தங்க நகைகளைக் கொடுத்தனர். அந்த நகைகளுக்கு பதிலாக ஒரு கிலோ தங்க பிஸ்கட்டாக வேண்டும் என்று கேட்டனர். அதன்படி அவர்களிடம் லால்டூ, தங்க பிஸ்கட்டை கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்ட கேரளா கும்பல், தங்க பரிசோதனைக் கூடத்தில் கொடுத்து அதன் தரத்தை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது லால்டூ கொடுத்தது தங்க பிஸ்கட் அல்ல என்பதும், அது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு கட்டி என்பதும் தெரியவந்தது. அவர்கள் லால்டூவின் கடைக்குச் சென்று, நீங்கள் செம்பு கட்டியைக் கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள் என்று தகராறு செய்தனர். அதற்கு லால்டூ, நான் தங்க கட்டிதான் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டே கடையை விட்டு வெளியே வந்தவர், திடீரென்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஷேண்டோ வர்கீஸ், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''கேரளா வாலிபர்கள் உண்மையிலேயே தங்க நகைகள் கொண்டு வந்தார்களா? லால்டூ எதற்காக கடையில் இருந்து தப்பி ஓடினார்? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக லால்டூவின் நகைக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. லால்டூவை தேடி வருகிறோம்'' என்றனர்.