தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம், திலகர் தெருவைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் ராஜு. இவர் இன்று 2 -ஆம் தேதி, ஈரோடு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, காவல் அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"நான் எம்.சி.ஏ முதுகலைப் பட்டம் படித்துள்ளேன். அரசு வேலைக்காக எதிர்பார்த்திருந்தேன். அதற்காக பலரிடமும் ஆலோசனை கேட்டிருந்தேன். இந்த நிலையில், தஞ்சாவூர் ஆரோக்கிய நகரைச் சேர்ந்த ஒரு நபர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்த ஒருவர் என்னை வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்குச் சேர்த்து விடுவதாகவும் அதற்கு ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். அவரை நம்பி முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தேன். அப்போது அந்த நபருடன் மேலும் சிலர் இருந்தனர். 15 நாட்கள் கழித்து அரசுப் பணி நியமன ஆணை வந்துள்ளதாகவும் அதற்கு மீதி தொகையைத் தர வேண்டும் என்றும் அவர் என்னிடம் செல்ஃபோன் மூலமாகத் தெரிவித்தார்.
அதன் பிறகு என்னிடம் இருந்த 30 ஆயிரத்தைக் கொடுத்து அவர்களிடமிருந்து ஒரு பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டேன். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னைக்கு வரச் சொன்னார்கள். அங்கு மீதமுள்ள ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்தையும் பெற்றுக்கொண்டு தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய, பணி நியமன உத்தரவைப் பெற்றுக் கொண்டு என்னை அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்தபோது, இந்தப் பணி உத்தரவு ஆணை போலியானது எனத் தெரியவந்தது. எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீதும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதேபோல, மேலும் 5 பேர் இன்று எஸ்.பி அலுவலகத்தில் வந்து தங்களிடமும் பணங்களைப் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கி, மேற்குறிப்பிட்ட அந்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் சுமார் ரூபாய் 50 லட்சம் வரை அந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுத்தனர். அரசு வேலை எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட அந்தக் கும்பல் யார் எனப் போலீசார் விசாரனையில் இறங்கியுள்ளனர்.