அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனை பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி பள்ளி கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.பாஸ்கர் ஆஜரானார். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, மாவட்ட வாரியாக அறிக்கைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பள்ளி கல்வி ஆணையர், ஜூலை 27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.