
'சின்ன குழந்தைகளிடம் கேட்டால் கூட நான் தான் எம்எல்ஏ என்று சொல்லும்' என ஜெயக்குமார் பேசியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''இந்த தொகுதியில் பேருக்கு தான் எம்எல்ஏ சம்பளம் வாங்குகிறாரே தவிர மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பது இன்று அதிமுகவை சேர்ந்த நாங்கள்தான். இன்னைக்கும் ஒரு குழந்தையிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். இந்த தொகுதி எம்எல்ஏ யார் என்று, கேட்டால் சின்ன குழந்தை கூட ஜெயக்குமார் என்றுதான் சொல்லும். நாங்கள் சாலையை ஏற்படுத்திக் கொடுத்தோம். அதில் வாகனங்கள் போய் வருகிறது. மழை பெய்தால் குண்டும்,குழியும் ஏற்படும். அதை மூட வேண்டிய பொறுப்பு யாருடைய பொறுப்பு. பராமரிப்பு இல்லை, ஒரு தொலைநோக்கு பார்வை கிடையாது, மக்களைப் பற்றி அக்கறை கிடையாது.
பெருமழை வந்தால் இந்த இடத்தில் இடுப்பளவு தண்ணீர் நிற்கும். மக்களுடைய நாடியைப் பிடித்து பார்த்து அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பவர்கள் தான் தலைவர்களாக ஆக முடியும். அந்த வகையில் தான் அண்ணாவும், எம்ஜிஆர்வும், ஜெயலலிதாவும் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் இன்று வரை தமிழ்நாட்டு மக்களால் பேசப்படுகிறது. உதாரணத்திற்கு இலவச லேப்டாப் கரோனா காலத்தில் லேப்டாப் எவ்வளவு பயன்பட்டது. ஜெயலலிதாவிற்கு தெரியுமா கரோனா வரும் என்று. கரோனா வந்த பொழுது கிட்டத்தட்ட 50 லட்சம் பிள்ளைகள் லேப்டாப் வைத்திருந்தார்கள். அவையெல்லாம் இந்த காலத்தில் பயன்பட்டது. அந்த மாதிரியான விலையில்லா திட்டங்கள் வேண்டும்'' என்றார்.