மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று (27.01.2021) காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
மெரினாவில் 50,422 சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. இந்த நினைவிட திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த விழாவிற்கு, மதுரை சார்பாக 1,500 மக்களை அழைத்துக்கொண்டு வருவதற்காக தனி ரயிலையே ஏற்பாடு செய்துள்ளார்.
1,500 பேருடன் அமைச்சர் மற்றும் அமைச்சர் குடும்பத்தினர் பயணம் செய்தனர். பயணித்தை தொடங்குவதற்கு முன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மதுரைக்காரங்க எது செஞ்சாலும் ஆரோக்கியமாகத்தான் செய்வோம். எதைச் செய்தாலும் ஆழமாக செய்வோம். பாசக்காரங்க... பாசக்காரன் மாட்டுமில்ல ரோசக்காரனும். தாயின் மீது பற்றுக்கொண்ட என்னைப் போன்றவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி, அந்த தலைவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். மதுரைக்காரங்க அப்படித்தான் இருப்போம். மதுரைக்காரங்க எல்லாருமே அப்படித்தான் இருப்போம்'' என கண்கலங்கினார்.