தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடியது, 'தேசவிரோத'ச் செயல் என்று, இந்த தமிழக அரசு கூறுகிறது. இதைவிட அவமானம் என்ன வேண்டும். அதிலும் 15 பேரை தேசவிரோதத் தடை சட்டமான, 124(A) பிரிவில் கைது செய்து, மத்திய பா.ஜ.க மோடி அரசுக்குத் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது, இந்த எடப்பாடி அரசு எனக் கொந்தளித்துப் பேசுகிறார்கள் பெரியாரிய உணர்வாளர்கள்.
பெரியாரிய தமிழ் உணர்வாளர்கள், நவம்பர் 1 -ஆம் தேதி தமிழகம் முழுக்க தமிழ்நாடு தினத்தைக் கொண்டினார்கள். இதற்குப் பல ஊர்களிலும் தடைபோட்டது காவல்துறை. இருப்பினும் ஆங்காங்கே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கோஷமிட்டுக் கலைந்துசென்றனர். சில ஊர்களில் போலீசார் கைதுசெய்து மாலையில் விடுவித்தனர்.
தமிழக ஒடுக்கப்பட்டேர் விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பாவலேறு பெருஞ்சித்தனார் மகனுமான பொழிலன், சென்னை மேடவாக்கத்தில் தமிழ்நாடு தினத்தைக் கொடியேற்றிக் கொண்டாடினார். இதற்காக இவர் உட்பட 15 பேர் மீது தேசத்துரோக வழக்குப் போட்டு, சிறையில் அடைத்து விட்டது காவல்துறை. இதைக் கண்டிக்கும் வகையிலும் சிறையில் உள்ளவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 -ஆம் தேதி ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இதன் ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார். திராவிட கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், திராவிட விடுதலை இயக்க ரத்தினசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தினம் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்ததைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பிறகு பெரியாரிய உணர்வாளர்களைக் கைது செய்து, மாலையில் போலீசார் விடுவித்தனர்.