அரசு கொடுக்கும் நிவாரண உதவிகள் உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அரசின் அறிவிப்பு முழுமையாக மக்களை சென்றடையும் என கூறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில துணை தலைவர் பெருந்துறை சின்னச்சாமி.
அவர் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொடுத்த விண்னப்பத்தில், "மாண்பமை கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ரிட் பெட்டிஷன் No:7423 of 2020 என்ற வழக்கில் நேற்று 3-4-2020 வழங்கிய தீர்ப்பின் நிலையை இத்துடன் இணைத்துள்ளோம். அத்தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டபடி, குடும்ப அட்டைகள் அதாவது ரேசன் கார்டு இல்லாத கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், புலம்பெயர்ந்த குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் 15கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அவர்களுக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
நமது ஈரோடு மாவட்டத்தில் மேற்கண்ட தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். வட மாநிலத்திலிருந்து கட்டுமான பணி மற்றும் நூற்பாலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்களில் குடும்பம் குடும்பமாக பணிபுரிந்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பத்தாயித்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அவர்களுக்கு ரேசன் கார்டு உள்ளிட்ட இருப்பிட சான்று எதுவும் இல்லை. இப்போது அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டது. வேலை இழப்பால் வருமானம் இன்றி உயிர் வாழ தேவையான உணவுக்கே வழி இல்லாத பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது.
ஆகவே, அவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் தமிழகம் முழுக்க உள்ள ரேசன் கார்டு அல்லது அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் இந்த கரோனா நிவாரண பொருட்கள் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.