கரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட 23 மாவட்ட பள்ளிகளில் தொடங்கியது. ஆனால் ஈரோடு உப்பட 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 28ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளான 28ந் தேதி அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
குறிப்பாக போன வருடம் கரோனா காலத்திலும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்த பெற்றோர் இந்த வருடம் இரண்டாவது அலை கரோனா ஊரடங்கு காரணங்களால் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் இவ்வருடம் அவர்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. ப்ரீ ஃகே.ஜி முதல் பிளஸ்- 2 வரை சேர்க்கை நடக்கிறது.
ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை 400 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலர் நேரடி சேர்க்கைக்கு வந்து செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவர்கள் கூறும்போது, “ஓராண்டுக்கும் மேலாக கரோனாவால் தொழில், வேலையை இழந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் அரசுப் பள்ளியை நாடி வருகின்றனர். அரசுப் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் அட்மிஷன் உண்டு. குறிப்பிட்ட வகுப்புகளில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. அவ்வாறு நிபந்தனை விதித்தால் புகார் செய்யலாம். ஜூலை 5-ஆம் தேதி முதல் அரசின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும்.
சேர்க்கைக்கு கால அவகாசம் கிடையாது. எனினும் விரைவாகச் சேர்ந்தால் உரியப் பயன் கிடைக்கும். சென்ற வருட கரோனா முதல் அலையில் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைத் தொடர்ந்து படிக்க வைத்த பெற்றோர்களில் 20 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை போட்டனர். இந்த வருடம் கரோனா இரண்டாவது அலைக்கு பிறகு இப்போது அதிக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்போது தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் குறைந்த பட்சம் 20 சதவீதம் பேர் அரசுப் பள்ளிக்கு மாறுகிறார்கள் என்பது தெரிகிறது.
2019 ம் ஆண்டுக்கு பிறகு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏறக்குறைய 40 சதவீதம் பேர் அரசுப் பள்ளிக்கு மாறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் தினக்கூலித் தொழிலாளர்கள், மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகள் தான். இதற்கு முழுமையான காரணம் வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து போனது தான். கரோனா பேரிடர் மக்களின் வாழ்வியல் சூழலை முழுமையாக மாற்றிவிட்டது.
தனியார் பள்ளிகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பது நாமக்கல், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் தான். இங்கு வாழும் மக்கள் உழைப்பின் மூலம், தொழில் புரிவதிலும் ஓரளவு வளமாக இருப்பவர்கள். ஆகவேதான் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதை பெருமையாகக் கருதினார்கள். இப்போது இந்த கரோனா அந்த பெருமைகளைச் சுக்கு நூறாக உடைத்துவிட்டது. இது ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது" என்றனர்.
ஈரோடு மட்டுமல்ல தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை என்பது 2019 வரை அறுபது சதவீதமாக இருந்தது சென்ற வருட முதல் அலையில் 30 சதவீதமாகக் குறைந்து, இந்த வருட சேர்க்கை என்பது பத்து சதவீதத்திற்குள் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களின் விகிதம் இந்த இரு வருடத்தில் 20 சதம் உயர்ந்துள்ளது என்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள்.