கடத்தப்பட்ட எனது மனைவியை மீட்டு தாருங்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பரிதாபமாக மனு கொடுத்தார் ஒரு இளைஞர்.
ஈரோடு மாவட்டம் காவலிபாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு வழங்கினர்.பின்னர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
நானும், ஆயிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுபதி மகள் மெளனிகா என்பவருக்கும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். இது பற்றி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மனுக் கொடுத்து, எங்களுக்கு பெண் வீட்டாரால் இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பு தர கோரினோம். இரு குடும்பத்தாரையும் அழைத்த போலீசார் சமாதானம் பேசி எழுதி வாங்கி கொண்டனர்.
இந்த நிலையில் சென்ற 9ம் தேதி மெளனிகாவின் உறவினர் ஒருவர் போன் செய்து மௌனிகாவின் தந்தை ரகுபதி உடல் நலக்குறைவால் பெருந்துறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்களை அழைத்தார். இதை நம்பி நானும், மனைவியும் மருத்துவமனை சென்றோம். ஆனால் வழியிலேயே எனது மாமனார் அவரது குடும்பத்தினர் சேர்ந்து என்னை தாக்கிவிட்டு எனது மனைவியின் நகையை பறித்ததோடு அவளையும் கடத்தி கொண்டு போய் விட்டனர்.
இது பற்றி பெருந்துறை போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனது மனைவியை மீட்டு என்னுடன் ஒப்படைக்க வேண்டும். மேலும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பெற்றோர் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி வருவார் என பரிதாபமாக காத்திருக்கிறார் அந்த இளைஞர்.