காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளம்பெண் இளமதியை மர்ம நபர்கள் கடத்திச்சென்றதாக காதல் கணவன் அளித்த புகாரின்பேரில், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 16) ஆஜரான அவர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் & செல்வி தம்பதியின் மகள் இளமதி (23). பவானி அருகே உள்ள தருமாபுரி சலங்கப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செல்வன் (28). இருவரும் பவானியில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் வேலை செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்தது.
செல்வன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இளமதி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளமதிக்கு வேறிடத்தில் திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அன்று பகல் 11 மணியளவில் அவர்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக (திவிக) பிரமுகர் ஈஸ்வரன் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இளமதியைத் தேடி அவருடைய தந்தை ஜெகநாதன் உள்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் அன்று இரவு கொளத்தூர் விரைந்தனர். அவர்கள் இளமதியை தனியாக ஒரு காரில் கடத்திச் சென்றதோடு, அவருடைய காதல் கணவன் செல்வன், சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்த ஈஸ்வரன் ஆகியோரையும் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையால் 9ம் தேதி இரவே செல்வனும், ஈஸ்வரனும் பத்திரமாக மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால், கடத்தப்பட்ட இளமதி குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே, தங்களைத் தாக்கியதாகவும், கடத்தப்பட்ட இளமதியை மீட்டுத்தரக்கோரியும் செல்வனும், ஈஸ்வரனும் தனித்தனியாக கொளத்தூர் காவல்நிலையத்தில் மார்ச் 10ம் தேதி காலையில் புகார் அளித்தனர்.
இரண்டு புகார்களின் பேரிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக பெண்ணின் தந்தை ஜெகநாதன் உள்பட 18 பேரை கைது செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க கடத்தப்பட்ட இளமதி எங்கே? என்ற விவகாரம், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மட்டுமின்றி, மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமாரும் இளமதியை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
இந்த பரபரப்புக்கிடையே, மார்ச் 14ம் தேதி மதியம் ஒரு மணியளவில், பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் உடன் இளமதி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். இளமதிக்கு பாதுகாப்பாக பாமக, கொமதேக, திமுக, அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்ட கார்களில் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் மேட்டூர் மகளிர் காவல்நிலைய பகுதியில் அசாதாரண நிலை உருவானது.
இளமதியுடன் செல்வனை தனியாகப் பேச வைக்க வேண்டும் என்று திவிகவினர் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. காவல்துறையும், பெண் தரப்பு வழக்கறிஞர்களும் அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போது காவல்நிலையத்தில் இளமதி, ''என்னை யாரும் கடத்திச்செல்லவில்லை. இப்போது என் தாயாருடன் செல்ல விரும்புகிறேன்,'' என்று எழுத்துப்பூர்வமாக தன்னிலை விளக்கம் அளித்தார். அவர் செல்வனுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக அவர் தரப்பு வழ க்கறிஞர் சரவணன் ஊடகங்களிடம் கூறினார்.
''இளமதியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்கக் கூடாது. அரசு காப்பகத்திற்குதான் அனுப்ப வேண்டும்'' என்று திவிக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். காப்பகத்திற்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்று ஆய்வாளர் சக்ரபாணியும் அழுத்தம் கொடுக்க, டிஸ்பி சவுந்திரராஜனோ அவருக்கு முட்டுக்கட்டை போட்டார். இளமதி அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என டிஎஸ்பி கூறினார். அதன்படி இளமதியும் தாயாருடன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றார்.
இதை ஏதோ தேர்தல் கொண்டாட்டம் போல, தெருவெங்கும் ஆரவாரமாக முழங்கியபடியே கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் இளமதிக்கு ஆதரவாக வந்த உறவினர்கள், கட்சியினர் ஊர்வலம் போல சென்றனர். இச்சம்பவம் முடிவுக்கு வர அன்று இரவு 9.30 மணி ஆனது. மார்ச் 14 அன்று, இளமதியை அழைத்துக்கொண்டு ஈரோடு செல்லும்போது வெகு நேரம் ஆகிவிட்டதால், அன்று இரவு ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்திலேயே அவரை தங்க வைத்தனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மார்ச் 10ம் தேதியன்று, இளமதியின் தாயார் செல்வி, தன் மகளை கடத்திச்சென்று விட்டதாக திவிக தலைவர் கொளத்தூர் மணி, அந்த அமைப்பின் பிரமுகர்கள் ஈஸ்வரன், சரவணபரத் மற்றும் இளமதியின் காதல் கணவர் செல்வன் ஆகியோர் மீது ஒரு புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில், இளமதியை மறுநாள் (மார்ச் 15) பவானி ஜே.எம்.&1 வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் ஜீவா பாண்டியன் முன்னிலையில் அவருடைய வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போதும் அவர், தான் தன் பெற்றோருடன் செல்லவே விரும்புவதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் சொன்னார். அதன்பிறகு அவரை தாயாருடன் செல்ல அனுமதித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
இந்நிலையில்தான், தன்னை தாக்கிவிட்டு தனது காதல் மனைவியை கடத்திச்சென்று விட்டதாக செல்வன் அளித்த புகாரின்பேரில், இளமதியை அவருடைய வழ க்கறிஞர் சரவணன் திங்கள்கிழமை (மார்ச் 16) சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தினார். அவர்கள் இளமதியை அழைத்துக்கொண்டு மதியம் ஒரு மணிக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டாலும், நீதிபதி வருவதற்கு தாமதம் ஆனதால், அதுவரை காத்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெண் வீட்டாருக்கு ஆதரவாக சேலத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
நீதிபதி வந்தபோது, இளமதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு கருத்தைச் சொன்னார்கள். அப்போது நீதிபதி, இளமதி மேஜர் ஆனவரா? அதற்கு ஏதேனும் பிறப்புச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ் ஆதாரம் இருக்கிறதா? எனக்கேட்டார். அப்போது அவர்களிடம் அதற்கான சான்றுகள் இப்போது கைவசம் இல்லை என்றனர். பிறகு, அவருடைய பிறந்த வருடம், தேதியைச் சொல்லும்படி கேட்டார். இளமதிக்கு 23 வயது ஆகிவிட்டது. அவர் மேஜர் ஆகிவிட்டார். அவர் 1997ம் ஆண்டில் பிறந்தவர் என்று கூறினர். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர், இந்த வழக்கிற்கு சி.எம்.பி. எண் போடப்பட்ட பிறகு மீண்டும் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
இதையடுத்து அரை மணி நேரத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. செல்வன் தரப்பில் வழக்கறிஞர்கள் பார்த்திபன், கனகராஜ், சங்கர், தமயந்தி ஆகியோர் ஆஜரானார்கள். செல்வன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை.நீதிமன்ற கூண்டில் ஏறிய இளமதி, ''நான் கடத்தப்பட்டதாக செல்வன் புகார் அளித்திருந்தார். ஆனால் என்னை யாரும் கடத்திச்செல்லவில்லை. நானாகாத்தான் பெற்றோருடன் சென்றேன். நான் என் பெற்றோருடனேயே செல்ல விரும்புகிறேன். என் முடிவில் யாருடைய தலையீடும் இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்திருக்கிறேன்.,'' என்று விளக்கம் அளித்தார். அதற்கு செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, அவர் விருப்பப்படியே பெற்றோருடன் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள், சம்பவத்தன்று இளமதி கடத்திச் செல்லப்பட்டதாக செல்வன் புகார் அளித்து இருந்தார். செல்வன் அளித்த புகாரின்பேரில் கொளத்தூர் காவல்துறையினர், கடத்தல் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் நபரே தன்னை யாரும் கடத்தவில்லை என்று சொன்னபிறகு, எதிர்காலத்தில், செல்வன் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர். அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று பதில் அளித்தார்.
மேலும் செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள், புகாரில் சொல்லப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து இளமதியை அவர் தரப்பு வழக்கறிஞர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக பின்பக்க வழியாக அழைத்துச்சென்று காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த வழக்கால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.