ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 27). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஆவார். இவர் கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் உள்ள ஒரு வீட்டை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு விலை பேசி 15 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தார். மீதமுள்ள தொகை, ரியல் எஸ்டேட் தொழிலுக்கான பணம் என மொத்தம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டரை பவுன் நகை ஆகியவற்றை புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் உள்ள அறையில் 4 பேக்குகளில் பத்திரமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி இந்த பணம் கொள்ளை போனது. இது குறித்து சுதர்சன் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், வடிவேல் குமார், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், சப் -இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது சுதர்சனின் பங்குதாரர்களான பிரவீன் (வயது 34), ஸ்ரீதரன் (வயது27) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2.80 கோடி ரூபாய் பணம், இரண்டரை பவுன் நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழில் நஷ்டம் காரணமாக பணத்தை திருடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்தார். கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பார்வையிட்டார். பின்னர் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீசாரை பாராட்டி சசி மோகன் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.