ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 1,678 வாக்குச்சாவடியில் கடந்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் இருந்த வாக்குச்சாவடி எண் 248 -ல் 50 மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவு நடந்தது. மேலும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளுக்கும் பதிவான வாக்குகளில் 9 வாக்குகள் குறைவாக இருந்தது. இதனால் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நாளை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2 பேலட் எந்திரங்கள், 1 விவி பேட் எந்திரங்கள் ஆகியவை ஏற்கனவே ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி பள்ளியில் இருந்து காங்கயம் தாலுகா அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் வாக்குப்பதிவின்போது பழுது ஏற்பட்டால் பயன்படுத்த கூடுதலாக 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருமங்கலம் வாக்குச்சாவடியில் மொத்தம் 918 வாக்குகள் உள்ளன. வாக்காளர்களுக்கு புதிதாக பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு அதிகாரிகளால் வழங்கப்பட்டுவிட்டது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டார்.
இந்த நிலையில் இரண்டாவது தவனையாக அ.தி.மு.க. தரப்பு திருமங்கலம் பூத் வாக்காளர்களுக்கு வைட்டமின் "ப" தாராளமாக விநியோகித்துள்ளது என்கிறது எதிர்தரப்பான தி.மு.க.