கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி பொதுத்துறை மற்றும் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும், மத்திய- மாநில அரசுகளின் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் விரோத கொள்கையைக் கண்டித்தும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்து நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் உட்பட 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, "பொதுமுடக்கக் காலத்தில் வருவாய் ஈட்டாத அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆறு மாத காலத்திற்கு ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கவேண்டும். வேலை நேரம் 12 மணியாக அதிகரிப்பதைக் கைவிடவேண்டும். இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடிக்காமல் பாதுகாக்கவேண்டும். ஊழியர்களின் அகவிலைப்படி லீவு சரண்டர் உரிமையைப் பறிக்கக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிடவேண்டும். கரோனா வைரஸ் தொற்றில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன .
இந்த ஆர்பாட்டத்தில் எல்.பி.ஃஎப்., ஏ.ஐ.டி.யு.சி., பணியாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.