பெரியசாமி என்பவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இப்போது, அதே வழக்கில், குண்டர் சட்டத்தில் அவரை கைதுசெய்ய ஈரோடு கலெக்டர் கதிரவன் 19ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோட்டையடுத்த ஆர்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் லாரி ஒட்டுநர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு அருகே பெரியசாமி, ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்த நிலையில், மாதேஸ்வரனின் 12 வயதான சிறுமியை, பெரியசாமி தனது கடைக்கு அழைத்துச் சென்று சாப்பிட மிட்டாய்களைக் கொடுத்து, அச்சிறுமிக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இது குறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். நெஞ்சம் பதறிய அவர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையை நேரில் சந்தித்துக் கண்ணீருடன் முறையிட்டதோடு, புகார் மனுவையும் கொடுத்துள்னர். இந்தக் கொடிய சம்பவத்தைக் கேட்டு உடனடியாக மாவட்ட எஸ்.பி தங்கதுரை, பவானி நகர மகளிர் காவலர்களை வைத்து, முழுமையான விசாரனை நடத்தியிருக்கிறார். விசாரணையில் எல்லாம் உண்மை என்பதை உறுதிப்படுத்தி, பெரியசாமியை கைது செய்தனர். மேலும், பெரியசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் கதிரவன், 19ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். பெரியசாமி, தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்க ஈரோடு மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.