விளைநிலத்தில் பலவந்தமாக எரிவாயுக்குழாய் பதிக்க பிரதமர் உத்தரவிட்டிருப்பது ஏன்? வேல்முருகன் கேள்வி
மக்கள் விரும்பாமல் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் அவர்களின் விளைநிலத்தில் பலவந்தமாக எரிவாயுக்குழாய் பதிக்க பிரதமர் உத்தரவிட்டிருப்பது ஏன்? இத்தகைய சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனைத் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை எண்ணூரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக பிரம்மாண்ட குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது நடுவண் அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாப்பேட்டை உள்ளிட்ட 22 கிராமங்களில் விவசாய நிலங்களில் அடையாளக் கற்கள் நடப்பட்டன. இதனை எதிர்த்து அந்தக் கிராமங்களின் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனாலும் இத்திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு நோட்டீசையும் வருவாய்த்துறை வழங்கியது.
அதோடு நேற்று முன்தினம் இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டமும் லாலாப்பேட்டையில் நடைபெற்றது. அதில், திட்டத்துக்கான நில எடுப்பு துணை ஆட்சியர் மதுசூதனன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன குழாய் பதிப்புத் திட்டப் பொது மேலாளர் தங்கராஜ், உதவி மேலாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த விவசாயிகள், ஆயில் நிறுவனத்துக்கு ஆதரவாகவே துணை ஆட்சியர் பேசியதால், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். திட்டத்தை எதிர்த்து இன்னும் வீரியத்துடன் போராடப் போவதாக அறிவித்தனர்.
திட்டத்தின்படி 18 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 6 அடிக்குக் குறையாத ஆழத்தில் குழாய் பதிக்கப்படும் என்றும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிகபட்ச விலையைவிட 40 சதவீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குழாய் பதிக்கும் நிலத்தில் வீடு, கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்தத் திட்டம் மட்டுமன்றி ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுசெல்லும் கெயில் திட்டத்தையும் செயல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தத் திட்டம் குறித்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அந்த ஏழு மாவட்டங்களில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியத்து 10 சதவீதத்தை இழப்பீடாகவும் 30 சதவீதத்தை கூடுதல் தொகையாகவும் வழங்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து கடந்த வாரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, “இத்திட்டப் பணியை தமிழக அரசு, கெயில் நிறுவனம் மற்றும் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும். 2018 டிசம்பர் 31ந் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இதின் மூலம் தெளிவாவது என்னவென்றால், தமிழக விவசாயத்தையே காலிபண்ணும் மோடி அரசின் முடிவுக்கு ஒத்துழைக்கும் விதமாகவே பழனிச்சாமி அரசு உச்ச நீதிமன்றத்தில் அந்த ஏழு மாவட்டங்கள் தொடர்பாக எதிர்த்து வாதாடவில்லை; மேலும் வேலூர் மாவட்டம் வழியான திட்டத்திலும் ஆட்சேபணை எதையும் தெரிவிக்கவில்லை.
பழனிச்சாமி அரசின் தமிழகத்திற்கு எதிரான இந்த படுபாதக நிலைபாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
முதலமைச்சரோ பிரதமரோ அவர்கள் தங்களின் விருப்பத்திற்கு அல்ல, மக்களின் விருப்பத்திற்கே ஆட்சி நடத்த வேண்டும் என்றுதான் பணிக்கிறது அரசியல் சாசனம்!
ஆனால் மக்கள் விரும்பாமல் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் அவர்களின் விளைநிலத்தில் பலவந்தமாக எரிவாயுக்குழாய் பதிக்க பிரதமர் உத்தரவிட்டிருப்பது ஏன்?
இத்தகைய சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனைத் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார்.