சேலம் அருகே, கஞ்சா போதையில் கார் ஓட்டி வந்த இன்ஜினியர் ஒருவர், சாலையோரம் நின்ற லாரி மீது மோதினார். அந்த காரில் இருந்து துப்பாக்கி, லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள உணவகம் எதிரில் ஆக. 7ம் தேதி, ஒரு லாரி விபத்தில் சிக்கி, சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த கார் ஒன்று, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
கார் மோதியதில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விரட்டிச்சென்று பிடித்து, காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறை விசாரணையில், அவருடைய பெயர் பர்கான் அலி (34) என்பதும், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவதும், பாலக்காட்டில் இருந்து ஆக. 7ம் தேதி சேலம் வழியாக பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரிய வந்தது.
சம்பவம் நடந்த போது அவர் கஞ்சா போதையில் இருந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில், வேகமாக காரை ஓட்டி வந்து லாரி மீது மோதியுள்ளார். அவர் வந்த காருக்குள் இருந்து ஏர் கன் துப்பாக்கி, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விபத்தில், பர்கான் அலி லேசான காயம் அடைந்துள்ளார்.
விசாரணையின்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் பேசியுள்ளார். இதையடுத்து அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது தொடர்பாக பர்கான் அலியின் மனைவிக்கு செல்போன் மூலம் காவல்துறையினர் தகவல் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.