இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்க இருக்கிறார். தொழிலாளர் நலத்துறை சார்பில் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவுகள் செய்யப்பட உள்ளன.
இன்று நடைபெறும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, ஃபார்மசி, நர்சிங், பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைக்கும் முதல்வர் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்க இருக்கிறார். அதேபோல் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நடைமுறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.