மதுக்கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்
பேராவூரணியில் சேதுசாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவிகளுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாசிலை அருகில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், காவல்துறை ஆய்வாளர்கள் பேராவூரணி ஜனார்தனன், திருச்சிற்றம்பலம் செந்தில்குமரன் மற்றும் அலுவலர்கள் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் "வரும் அக் 27 ந்தேதி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும்" என அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழியை ஏற்று முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இரா.பகத்சிங்.